×

ரூ.30 கோடி மதிப்பீட்டில் மாமல்லபுரம் கடற்கரையை அழகுபடுத்தும் திட்ட பணி: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

மாமல்லபுரம்: சுற்றுலாத்துறை மூலம் மாமல்லபுரம் கடற்கரை கோயிலையொட்டி 43 ஏக்கரில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் கடற்கரையை அழகுபடுத்தும் திட்ட பணியை பிரதமர் மோடி நேற்று காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.
மாமல்லபுரத்திற்கு தினமும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகை தருகின்றனர். அப்படி, வருபவர்கள் இங்குள்ள புராதன சின்னங்களை சுற்றிப் பார்த்து மகிழ்ச்சி அடைகின்றனர். இந்நிலையில், சுற்றுலா பயணிகளை அதிகளவில் ஈர்க்கும் வகையில், சுற்றுலா மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள தமிழ்நாடு சுற்றுலாத் துறை முடிவு செய்தது.

அதன்படி, ஒன்றிய அரசு நிதி உதவியுடன் மாமல்லபுரம் கடற்கரை கோயிலையொட்டி சுவதேஷ் தர்ஷன் 2.0 திட்டம் மூலம் தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் முதற்கட்டமாக ரூ.30 கோடி மதிப்பீட்டில் கடற்கரை கோயிலையொட்டி 43 ஏக்கரில் அழகுபடுத்த திட்டமிடப்பட்டது. இத்திட்டம், மூலம் மாமல்லபுரம் நுழைவாயில் பகுதியில் அலங்கார வளைவு, தலசயன பெருமாள் கோயில் குளம் அழகு படுத்துதல், துடிப்பான செயல்திறன் அரங்குகள், நட்சத்திர கடல் உணவகங்கள், நினைவு பரிசு கடைகள், தங்கும் விடுதி, குளியலறை, கழிப்பறை, வாகன நிறுத்துமிடம், கண்காணிப்பு கோபுரம், போக்குவரத்தை குறைக்க இணைப்புச்சாலை, மின் விளக்குகள் பொருத்துவது, சிசிடிவி கேமரா அமைப்பது, வைபை வசதி ஏற்படுத்துவது, நடைபாதை பூங்கா அமைப்பது, வரவேற்பு அறை, சுற்றுலாப் பயணிகள் தகவல் மையம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி ஜம்மு – காஷ்மீர் ஸ்ரீநகர் பகுதியில் இருந்து நாடு முழுவதும் ரூ.6400 கோடி மதிப்பீட்டில் 53 திட்டங்களை காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.

இதில், தமிழ்நாட்டில் சுவதேஷ் தர்ஷன் 2.0 திட்டம் மூலம் மாமல்லபுரம் கடற்கரை கோயிலையொட்டி முதற்கட்டமாக ரூ.30.2 கோடி மதிப்பீட்டில் சுற்றுலா மேம்பாட்டு பணிகளையும் தொடங்கி வைத்து பேசினார். இதையடுத்து, மாமல்லபுரம் கோவளம் சாலையில் உள்ள தனியார் ரிசார்ட்டில் நடந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய சுற்றுலா அமைச்சகத்தின் இயக்குனர் சீமா ஜெயின் தலைமை தாங்கினார். தெற்கு மண்டல இயக்குனர் வெங்கடேசன், மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் சக்திவேல், மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்த்ராவ், தொல்லியல் துறை அலுவலர் ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி கலந்து கொண்டு, சுவதேஷ் தர்ஷன் 2.0 திட்டம் மூலம் மேற்கொள்ளப்பட உள்ள பணிகளை கேட்டறிந்தார். அப்போது, அங்குள்ள எல்இடி பிரமாண்ட திரை மூலம் 43 ஏக்கரில் மேற்கொள்ளப்பட உள்ள பணிகளின் மாதிரி வரை படங்களை திரையிட்டு பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் சுற்றுலா வழிகாட்டிகளுக்கு தெளிவாக விளக்கிக் கூறப்பட்டது.

The post ரூ.30 கோடி மதிப்பீட்டில் மாமல்லபுரம் கடற்கரையை அழகுபடுத்தும் திட்ட பணி: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Mamallapuram ,Modi ,Mamallapuram beach ,
× RELATED எல்லோரையும் போல நானும் எனது ஆட்டத்தை...